ஷீஆ எனும் சொல்லுக்கு அகராதியில் கட்சி> குழு> பின்பற்றுதல்> உதவி செய்தல்> தொடர்ந்து செல்லுதல் எனும் கருத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன. (அல் முஃஜமுல் வஸீத்)
இமாம் ஜௌஹரி தனது அகராதியில் 'ஷீஆ எனும் சொல்லுக்கு பின் பற்றுதல். அல்லது தொடருதல் எனும் கருத்தே மிகச் சிறந்தது. ஏனெனில் 'ஷீஅதுர் ரஜுல்' (شیعه الرجل) ஒரு மனிதனின் ஷீஆ என்றால் அவரை பின்பற்றுவோர்களையே அவ்வாறு கருதப்படும்' எனக் கூறுகிறார்கள். இந்தக் கருத்தின் அடிப்படையில் தான் பின்வரும் அல்குர்ஆன் வசனங்களிலும் ஷீஆ எனும் சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது.
وإن من شیعته لابراهیم
'மேலும் நூஹின் வழியை பின்பற்றுபவராக இப்றாஹீம் இருந்தார்' (சூரா அஸ்ஸாப்பாத்:83)
هذامن شیعته وهذامن عدوه
'ஒருவன் அவருடைய சமூகத்தை சேர்ந்தவன்> மற்றவர் அவருடைய எதிரிகளின் சமூகத்தை சேர்ந்தவன்'(சூரா அல்கஸஸ்:15)
இவ்விரு வசனங்களில் ஷீஆ எனும் சொல் ஒருவரை பின்பற்றுதல் அல்லது அவர் வழியை தொடர்தல் எனும் அடிப்படையிலேயே பயன் படுத்தப்பட்டுள்ளது. இதன் படி ஷீஆக்கள் எனப்படுவோர் நபியவர்களின் வபாத்தின் பின்னர் இமாம் அலீயை பின்பற்றுபவர்கள் என்பதையே இமாம் ஜௌஹரி குறிப்பாக குறிப்பிடுகின்றார்.
ஷீஆ எனும் சொல்லுக்கு இமாம்கள் வழங்கிய கருத்துக்கள் சில:
1- இமாம் சஹ்ரிஸ்தானி : ஷீஆக்கள் என்பவர்கள் நபியவர்களின் வபாத்தின் பின்னர் இமாம் அலீயை பின்பற்றியவர்கள். அவருடைய இமாமத் வெளிவாக வஸிய்யத் மூலம் நபியவர்களால் வழங்கப்பட்டது எனக் கருதுபவர்கள். (அல்மிலல் வன்னிஹல் பாகம்-1 பக்கம்-107)
2- இமாம் இப்னு ஹஸ்ம் : நபியவர்களுக்குப் பின் அலீ(அலை) அவர்களே மிகச்சிறந்த மனிதர், அவரும் அவரது சந்ததியினருமே கிலாபத்திற்கு மிகத் தகுதியானவர்கள் எனக் கருதுபவர்கள் தான் ஷீஆக்கள். (அல் பஸல் 02:113)
3- இஸ்லாமிய வரலாற்றாசிரியர் இப்னு ஹல்தூன்: அலீ(அலை) அவர்களையும் அவர்களது சந்ததியினரையும் தோழமை கொண்டவர்களே ஷீஆக்கள். (முகத்தமா: 138)
ஷீஆ பிரிவின் அல்லது சொல்லின் தோற்றம்
இமாம் அலி (அலை) அவர்களை நபியவர்களுக்குப் பின் கலீபாவாக நபியவர்களே நியமித்தார்கள் என்று வாதிடும் ஷீஆப் பிரிவினர்> வரலாற்றில் எப்போது தோற்றம் பெற்றார்கள் அல்லது முதன் முதலில் ஷீஆக்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் யார் எனும் வினாக்களுக்கு விடை காணும் போது இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் முரண்படுகின்றனர்.
ஷீஆக்களின் தோற்றம் சம்பந்தமாக வரலாற்றாசிரியர்கள்
ஷீஆ எனும் சொல்லானது ஸகீபா பனி ஸாயிதாவில் தோற்றம் பெற்றது.
அதாவது நபியவர்களின் வபாத்தை அடுத்து கலீபாத் தெரிவுக்காக ஸகீபா பனி ஸாயிதாவில் ஸஹாபாக்கள் ஒன்று சேர்ந்தனர். கலீபா முஹாஜிரீன்களிலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என சிலரும் அன்சாரீன்களிலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என சிலரும் அபிப்பிராயப்பட்ட சந்தர்ப்பத்தில் ஒரு சில ஸஹாபாக்களது பெயர்களும் குறிப்பிடப்பட்டு சிபாரிசு செய்யப்பட்டது. அவர்களில் அபூ உபைதா (ரலி)> அபூ பக்கர் (ரலி)> உமர்(ரலி) போன்றோரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்ட போது ஒரு கூட்டத்தினர் கிலாபத் பொறுப்பை ஏற்பதற்கு அலீ (அலை) அவர்களே மிகத் தகுதியானவர் என வாதாடினர். இவ்வாறு வாதாடியவர்களுள் ஹஸரத் ஸல்மானுல் பாரிஸி> அபூதர் அல் கப்பாரி, மிக்தாத் பின் அஸ்வத். அம்மார் பின் யாஸிர் போன்றோர் முக்கியமானோராவர்.
எனவே ஸகீபா பனி ஸாயிதாவில் கிலாபத் பொறுப்பு ஹஸரத் அலீக்கே சென்றடைய வேண்டும் என வாதாடிய அக்கூட்டத்தினருக்கே முதன் முதலில் شیعة علی (ஷீஅது அலி) அலியைச் சார்ந்தோர் எனக் கூறப்பட்டது.
(தாரீஹ் இப்னு கல்தூன்: 03:364)
(கலாநிதி ஹஸன் இப்றாஹீம் -தாரிகுல் இஸ்லாம்: 03:37)
2- கலீபா அபூபக்கர் கலீபாவாக தெரிவு செய்யப்பட்ட போது அவருக்கு பைஅத் செய்யாமல் அன்சாரீன்கள் மற்றும் முஹாஜிரீன்களைச் சேர்ந்த சிலர் இமாம் அலியுடன் இணைந்திருந்தார்கள். அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப், பழ்ல் பின் அப்பாஸ், சுபைர் பின் அவாம், காலித் பின் ஸயீத், மிக்தாத் பின் அம்ர், ஸல்மானுல் பாரஸி, அபூதர்ருல் கிபாரி, அம்மார் பின் யாஸிர், அல்பர்ரா ஆஸிப், உபை பின் கஃப், ஆகியவர்கள் இமாம் அலியுடன் இணைந்திருந்தோரில் சிலராவர். இதனால் இவர்கள் (ஷீஅது அலி) அலியின் கூட்டம். என அழைக்கப் பட்டார்கள்.
(அல் யஃகூபி: தாரீகுல் யஃகூபி 02:124)
3- முன்றாம் கலீபா உதுமான் அவர்கள் கொலை செய்யப்பட்ட தினமே ஷீஆக்கள் தோற்றம் பெற்றனர். அவர்கள் தான் நபியவர்களின் வபாத்தின் பின்னர் தோன்றிய முதலாவது பிரிவினர். (இமாம் இப்னு ஹஸ்ம்- அல் பஸல்)
4- நபியவர்களின் வபாத்தின் பின்னர் கிலாபத் பதவியை அஹ்லுல் பைத்தினரே பெறுவதற்கு மிகத் தகுதியானவர்கள் எனக் கருத்துக் கொண்டவர்கள் ஷீஆக்கள் என அழைக்கப்பட்டனர். (கலாநிதி அஹமத் அமீன்- பஜ்ருல் இஸ்லாம்)
5- ஷீஆப் பிரிவு ஜமல் யுத்த தினமன்று பஸராவில் தோற்றம் பெற்றது. (இப்னு நதீம்- அல் கவாரிஜ் வ'ஷ்ஷீஆ: 146)
6- சிப்பீன் யுத்தத்தின் போது ஹஸரத் அலியின் அணியிலிருந்து சிலர் பிரிந்து சென்றனர். இவர்கள் கவாரிஜீன்கள் என அழைக்கப் படுகின்றனர். இவ்வாறு அவர்கள் பிரிந்து சென்ற போது இமாம் அலியுடன் இணைந்திருந்தவர்கள் தங்களை 'ஷீஅது அலி' அலியின் கூட்டம் என அடையாளப் படுத்திக் கொண்டனர். 'அலியைப் பின்பற்றியவர் என்னை பின்பற்றியவர்' எனும் நபி மொழியை ஆதாரமாகக் கொண்டு 'நாங்கள் தான் இமாம் அலியுடன் இணைந்து, அவர் வழியை பின்பற்றுகின்றோம்;. ஆகவே நாங்கள் தான் 'ஷீஅது அலி' எனப் பெருமையோடு பெயர் சூட்டியும் கொண்டனர். . (watt w.m islam and the indegration)
7- இமாம் ஹுஸைனின் ஷஹாதத்துக்குப் பின்னர் அவர்களுக்கு உதவி செய்யவில்லை என்று கைசேதப்பட்டு ஒரு பிரிவினர் அவரது அடக்கஸ்தலத்தில் மண்டியிட்டுக் கிடந்தனர். அவர்களே ஷீஆக்கள் என கருதப்பட்டனர்.
(கலாநிதி காமில் முஸ்தபா அஷ்ஷெய்பி: அஸ்ஸிலது பைன தஸவ்வுப் வத்தஷய்யு: 23)
8- பாரசீகப் பகுதிகளில் காணப்பட்ட சிந்தனைகளின் விளைவாகவே ஷீஆ இயக்கம் தோற்றம் பெற்றது என ஐரோப்பிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்களில் 'போசி' முக்கியமானவராவார்.
9- அப்துல்லாஹ் இப்னு ஸபா (இப்னு சௌதா) வின் தீவிர விசமக் கருத்துக்களின் விளைவாகத் தோன்றியதே ஷீஆப் பிரிவு.(ஸாமி நஸ்ஸார், நஸ்அதுல் பிக்ரில் பல்சபில் இஸ்லாம்: 18)
10- 'ஷீஅது அலி' என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நபி(ஸல்) அவர்களாலேயே அலியுடன் இணைந்தோரைக் குறிக்கப் பயன்பட்ட ஒரு வாசகம் என இமாமிய்யாக்கள் குறிப்பிடுகின்றனர்.
(இமாமிய்யா வரலாற்று நூல்கள்)
இவ்வாறு ஷீஆக்களின் தோற்றம் பற்றி வரலாற்றாசிரியர்கள் முரண்பாடான பல கருத்துக்களை கொண்டுள்ள போது அதில் மிக உண்மையான கருத்து எது என அறிய முயற்சிப்பது இஸ்லாத்தை விளங்க முயல்பவர்களின் கடமையாகும். இவை பற்றி எவ்வித அபிப்பிராயமுமில்லாமல் கண்மூடித் தனமாக ஷீஆக்களை விமர்சிப்பதும் நூல் எழுதுவதும் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவதும் அறிவுபூர்மனதாக ஆகாது.
ஷீஆக்களின் தோற்றம் பற்றி இங்கு குறித்துக் காட்டப்பட்ட சுமார் பத்து முரண்பாடான கருத்துக்களில், முந்திய ஒன்பது கருத்துக்களும் நபியவர்களின் வபாத்தின் பின்னர் இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்பட்ட சில பாதகமான சூழ்நிலைகளின் விளைவாகவே ஷீஆ சிந்தனை தோற்றம் பெற்றதாக குறிப்பிடுகின்றன. ஆனால் பத்தாவது கருத்தான இமாமிய்யாக்களின் கருத்து இங்கு நோக்கத்தக்க முக்கியமான கருத்தாக காணப்படுகின்றது.
இமாமிய்யாக்கள், இமாம் அலியுடன் இணைந்திருந்த ஸஹாபாத் தோழர்களைப் பார்த்து அவர்களை 'ஷீஅது அலி' என நபியவர்களே குறிப்பிட்டதாகவும் இதன்படி ஷீஆ ஸ்தாபகர் நபி(ஸல்) அவர்களே என்றும் பின்வரும் ஆதாரங்களின் முலம் தங்களது கருத்தை உறுதிப் படுத்திக் கொள்கின்றனர்.
ஷீஆ இயக்க இஸ்தாபகர் யார்?
اخرج ابن عساکرعن جابربن عبدالله قال: کناعندالنبی (ص) فأقبل علی فقال النبی (ص) والذی نفسی بیده إنَ هذا وشیعته هم الفائزون یوم القیامة ونزلت'إن الذین آمنوا وعملواالصالحات الئک هم خیرالبریة' (درالمنثور- سورة البینة 7)
1- ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நாம் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது தூரத்திலிருந்து ஹஸரத் அலி தோன்றினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக 'இந்த மனிதரும் இவரது ஷீஆக்களும் (இவரை பின்பற்றுபவர்களும்) இறுதி தீர்ப்பு நாளில் விமோசனமடைவார்கள்'; எனக் கூறினார்கள். அப்போது 'படைப்புக்களில் விசுவாசங் கொண்டு நற்செயல்கள் புரிபவர்கள்தான் மிகவும் சிறந்தவர்கள்' எனும் திரு வசனம் இறங்கியது.
(இப்னு அஸாகிர்: அத்தாரீக் தர்ஜுமது அலி 02:442)
اخرج ابن عدی عن بن عباس قال: لما نزلت (إنَ الذین آمنوا وعملوا الصالحات أولئک هم خیرالبریة) قال رسول الله (ص) لعلی : هوانت وشیعتک یوم القیامة راضین مرضیین.
2- இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: அல்லாஹு தஆலா إن الذین آمنوا وعملوا الصالحات أولئک هم خیرالبریة எனும் வசனத்தை இறக்கிய போது ஹஸரத் அலி (அலை) அவர்களைப் பார்த்து, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நீரும் உம்மைச் சார்ந்தவர்களும் மறுமை நாளில் இறைவனைப் பொருந்தியவர்களாகவும் இறைவன் உங்களைப் பொருந்திய நிலையிலும் வருவீர்கள்'(உமது பகைவர்களோ கைசேதப்பட்டவர்களாhக வருவார்கள்.)
(இமாம் இப்னு ஹஜர் அஸ்ஸவாயிகுல் முஹ்ரிகா- 1:11)
عن علي قال: قال لي رسول الله(ص) الم تسمع قول الله' إن الذین آمنوا وعملوا الصالحات أولئک هم خیرالبریة' انت وشیعتک، وموعدي وموعدکم الحوض. اذاجئت الامم للحساب تدعون غرا محجلین.
3- ஹஸரத் அலி (அலை) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை நபியவர்கள் 'அலியே! إن الذین آمنوا وعملوا الصالحات أولئک هم خیرالبریة எனும் அல்லாஹ்வின் வார்தையை செவிமெடுக்கவில்லையா? அவர்கள் உம்மைச் சார்ந்தவர்களாவர்;. எனது இடமும்> உமது இடமும் ஹவ்லுல் கவ்தராகும். அங்கு நிற்கும் போது உம்மைச் சார்ந்தோர் வெண்மை நிறமுடையவர்களாக வருவார்கள்.
(இமாம் ஹாகிம் ஹஸ்கதனி: ஸவாஹிலுத் தன்ஸீல் 02:356)
4- முஹம்மத் பின் அலி அறிவிக்கின்றார்கள்: إن الذین آمنوا وعملوا الصالحات أولئک هم خیرالبریة எனும் வசனம் இறங்கிய போது நபியவர்கள் 'நீரும் உம்மைச் சார்ந்தவர்களும் தான் அலியே' எனக் குறிப்பிட்டார்கள். (தப்ஸீருத் தபரி03:365)
5- ஹஸரத் அலி (அலை) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபியவர்கள் என்னைப் பார்த்து 'அலியே! إن الذین آمنوا وعملوا الصالحات أولئک هم خیرالبریة எனும் வசனத்தை செவிமெடுக்கவில்லையா? அவர்கள் நீரும் உம்மைச் சார்ந்த ஷீஆக்களும் தான். நீங்களும் நானும் ஹவ்லுல் கவ்தரிடத்தில் இருக்கும் போது கேள்வி கணக்குக்காக மக்கள் வருவார்கள். அப்போது உம்மைச் சார்ந்தோர் வெண்மை நிறமுடையவர்களாக வருவார்கள்.' (இமாம் சுயூத்தி: துர்ருல் மன்தூர் 06:379)
இவை தவிர இதே ஹதீத்களை பின்வரும் இமாம்களும் குறிப்பிடுகின்றனர்:
1- இமாம் சௌகானி: பத்ஹுல் கதீர்: பக்கம் 398
2- இமாம் ஆலூசி : ரூஹுல் மஆனி: பக்கம் 570
3- இமாம் அல் பலாதரி: இன்சாபுல் அஸ்ரார்: பக்கம் 182
4- இமாம் அல் குவாரிஸ்மி: அல் மனாகிப்: பக்கம் 111
எனவே நபியவர்கள் தான் ஷீஆ எனும் சொல்லை இமாம் அலியுடன் இணைந்திருந்தவர்களை பார்த்து பிறயோகித்துள்ளார்கள் என்பது மிகத் தெளிவாகின்றது. உண்மையில் நபியவர்கள்> தனக்குப் பின் இமாம் அலீ (அலை) அவர்களை தனது பிரதிநிதியாக நியமித்து> அவர்களின் கீழ் ஒன்றுபடும் அனைவரையும் உள்ளடக்கியதாகவே ஷ'Pஆ எனும் சொல்லைப் பிரயோகித்துள்ளார்கள். தவிர நபியவர்கள் ஒரு பிரிவாக இதனை அடையாளப்படுத்தவில்லை.
வரலாற்றில் ஷீஆக்களை முழுமையாகப் பின்பற்றுபவர்கள் இமாமிய்யாக்கள் என அழைக்கப் படுகின்றார்கள். அதாவது இமாம் அலி(அலை) அவர்களை முதலாவது இமாமாகவும் தொடர்ந்து இமாம் மஹ்தி(அலை) அவர்கள் வரையில் வந்த ஏனைய 11 இமாம்களையும் இவர்கள் பின்பற்றுகின்றனர். கிலாபத் என்பது இறைவனாலும் அவனது றஸுலாலும் தீர்மானிக்கப்பட வேண்டியது என்பதே இவர்களது அடிப்படை வாதமாகும். இதன் அடிப்படையில் இமாம் அலி(அலை) அவர்களை நபி(ஸல்) அவர்களே தனக்குப் பின் தனது பிரதிநிதியாக நியமித்தார்கள் என்பதற்கு பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.
01- நபி(ஸல்) அவர்கள் தனது பிரசாரத்தின் ஆரம்ப காலப் பகுதியிலேயே இமாம் அலியை தனக்குப் பின் தனது பிரதிநிதியாக> வஸீயாக நியமித்த ஹதீத் மிகப் பிரபல்யமானதாகும்.
وانذرعشیرتک الاقربین அதாவது> 'நபியே உமது நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமுட்டி எச்சரிக்கை செய்யும'; (ஷுஅரா214)
எனும் அல்குர்ஆன் வசனம் இறங்கிய போது> நபியவர்கள் தனது உறவினர்களை அழைத்து அவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரித்த பின்: 'فأيکم یوازرني في هذالامرعلی ان یکون أخي،ووزیري،وخلیفتي،ووصي فیکم' ' தன்னை நபியாகவும், தனக்கு வஹி அருளப்படுவதாகும் அவர்களுக்கு விளக்கி தனது இந்தப்பணியின் பிரசாரத்துக்கு உதவி செய்பவரை தனக்குப் பின் கலீபாவாகவும் வஸீராகவும்(அமைச்சராகவும்) பிரகடனப் படுத்திய போது இமாம் அலி(அலை) அவர்கள் மாத்திரமே அங்கு எழுந்து நின்றார்கள். அவரை அமர வைத்த நபியவர்கள் மீண்டும் அவ்வாறே வினவிய போது மீன்டும் இமாம் அலி அவர்களே எழுந்து நின்றார்கள். ஏனையோர் நபியவர்களுக்கு உதவி செய்து அவருடைய கலீபாவாக> வஸீராக ஆக விரும்பவில்லை.
இறுதியில் நபி(ஸல்) அவர்கள்:
إنّ هذاأخي،ووصيّ،وخلیفتي فیکم فاسمعواله واطیعوه. 'இந்த மனிதர் (அலி) என் சகோதரரும் வாரிசும் பிரதிநிதியுமாவார். எனவே நீங்கள் இவரது சொல்லை செவிமடுத்து இவரை வழிப்படுங்கள்' என இமாம் அலியைப் பார்த்து கூறினார்கள். இதனைக் கண்ணுற்ற அக்கூட்டத்தினர் இமாம் அலியின் தந்தையாகிய ஹஸரத் அபூதாலிபைப் பார்த்து பரிகாசம் செய்தனர். இந்தப் பிரபல்யமான ஹதீத் பின்வரும் நூல்களில் பதிவாகியுள்ளன.
1-இமாம் அலாவுத்தீன் அல் ஹாஸின்: தப்ஸீருல் குர்ஆன் 05:127
2-இமாம் இப்னு அஸாகிர் : தாரீக் அப்னு அஸாகிர் 01:104
3-இமாம் சுயூத்தி : துர்ருல் மன்தூர் 05:98
4-இமாம் இப்னு கதீர் : தப்ஸீருல் குர்ஆன் 03:363
5-இமாம் அஹ்மத் பின் ஹன்பல்: அல்முஸ்னத் 01:111
6-இமாம் தபரி : தாரீகுத் தபரி 02:62,63
7-இப்னு அபில் ஹதீத் : ஷர்ஹு நஹ்ஜுல் பலாஹா 13:210-212
02- நபி(ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜின் (ஹஜ்ஜதுல் விதாவின்) முடிவின் போது> இமாம் அலி(அலை) அவர்களை அங்கு நிறைந்திருந்த பல்லாயிரக் கணக்கான ஸஹாபாக்களுக்கு மத்தியில் 'கதீர் கும்' எனும் இடத்தில்> துல்ஹஜ் 18ம் நாளன்று தனது பிரதிநிதியாக நியமித்தார்கள்.
துல்ஹஜ் 18ம் நாள் அன்று ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில்; வந்து
یاایهاالرسول بلغ ماانزل الیک من ربک وان لم تفعل فمابلغت رسالته والله یعصمک من الناس ان الله لایهدی القوم الکافرین )المائدة: 23)
'தூதரே உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கி வைக்கப்பட்ட விடையத்தை எத்தி வையும். அவ்வாறு நீர் செய்யவில்லையென்றால் ரிஸாலத்தை எத்தி வைத்தவராக ஆகமாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களின் (தீங்கிலிருந்து) காப்பாற்றுவான் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்திற்கு நேர் வழி காட்டமாட்டான்' (சூரா மாயிதா:67) எனும் கட்டளையை கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தனது 23வருட காலங்களாக அயராது, தனது ரிஸாலத்தை எத்தி வைத்தபோதிலும் மேற்படி வசனத்தின் மூலம் தற்போது எத்தி வைக்கப்பட வேண்டிய விடயம் மிக முக்கியமானது என்பதை நபியவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
இறைவனின் இக்கட்டளையை ஏற்ற நபியவர்கள் மக்காவுக்கும் மதினாவுக்குமிடையில் உள்ள 'கதீர் கும்' எனுமிடத்தில் பல்லாயிரக்கணக்கான ஸஹாபாக்களைப் பார்த்து நீண்ட உபதேசம் உன்றைச் செய்தார்கள்.முடிவில்.
وأنا تارک فیکم ثقلین،اوّلهماکتاب الله فیه الهدی والنورفخذوا بکتاب الله واستمسکوابه فحث علی کتاب الله وررغب فیه ثم قال وأهل بیتی أذکرکم الله فی اهل بیتی أذکرکم الله فی اهل بیتی أذکرکم الله فی اهل بیتی (صحیح المسلم: ص ஃج4)1873
'உங்களிடம் இரு முக்கிய விடையங்களை விட்டு செல்கின்றேன>; அவற்றில் ஒன்று அல்குர்ஆன் என்று கூறிய நபியவர்கள் அதனது சிறப்புக்களையும்> தன்மைகளையும் எடுத்துரைத்தார்கள். அதன் பின் இரண்டாவது விடயம் எனது குடும்பமாகிய அஹ்லுல் பைத் எனக் கூறி எனது குடும்பத்தினர் விடயத்தில் உங்களுக்கு நான் அல்லாஹ்வை ஞாபகமூட்டுகின்றேன்' என மூன்று முறை கூறினார்கள்.
(ஆதாரம் ஸஹீஹ் முஸ்லிம் பாகம்:04 பக்கம்1873)
அதன் பின் ஸஹாபாக்களைப் பார்த்த நபியவர்கள் 'எனது பொறுப்பாளி அல்லாஹ் தான். நான் முஃமின்களின் பொறுப்பாளன்> நான் யாருக்கெல்லாம் பொறுப்பாளனாக இருந்தேனோ இனி அவர்களுக்கெல்லாம் அலீ பொறுப்பாளராக இருப்பார்' என மூன்று தடவைகள் கூறினார்கள். இதனை செவிமெடுத்த ஸஹாபாக்கள் இமாம் அலி(அலை) அவர்களுக்கு 'அபூ தாலிபின் மகனே! இன்றிலிருந்து முஃமின்களான ஆண்களுக்கும் பெண்களுக்கும் தலைவராகி விட்டீர். உமக்கு சுபசோபனம் உண்டாவதாக'
(بخ بخ یابن ابی طالب اصبحت وامسیت مولای ومولاکل مؤمن ومؤمنة)
என வாழ்தினார்கள் இதன் பின்னர்தான் அல்குர்ஆனின் இறுதி வசனமாகிய :
'الیوم اکملت لکم دینکم واتممت علیکم نعمتی ورضیت لکم الاسلام دینا(المائده 3)
'இன்றைய நாள் உங்களது மார்க்கத்தைப் பூர்த்தியாக்கி விட்டேன்' (மாயிதா 3) எனும் வசனம் இறங்கியது.
மேற்படி நபியவர்கள் 'கதீர்கும்' எனுமிடத்தில் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, இமாம் அலியை தனக்குப்பின் தனது பிரதிநிதியாக தனது இடத்திற்கு நியமித்தார்கள். 'முதவாதிர்' எனும் நிலையில் இந்த ஹதீஸ் காணப்படுகின்றது. 36க்கும் மேற்பட்ட ஸஹாபாக்கள் இந்த ஹதீதை அறிவிக்கின்றனர். அவற்றில் சில:
1- ஸஹீஹுல் முஸ்லிம் : பாகம்: 4 பக்கம்: 1873
2- மிஷ;;;;காத் : பாபு மனாகிபு அலி
3- துர்ருல் மன்தூர் : பாகம்: 3 பக்கம்: 117
4- ஸஹீஹுத்திர்மிதி : பாகம் 5 பக்கம்: 662
5- அல் முஸ்னத் அஹ்மத்: பாகம் 5 பக்கம்: 182
6- இஹ்யாஉல் மையித் : பக்கம்: 5
قال رسول (ص):اماترضی ان تکون منی بمنزلة هارون من موسی الا انه لا نبي بعدی.
03- தபூக் யுத்தத்திற்கு நபியவர்கள் வெளியான போது அலியை தனது பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது ஹஸரத் அலி அவர்கள் நிபியவர்களைப் பார்த்து 'சிறு பிள்ளைகளுக்கும், பெண்களுக்குமா என்னை பிரதிநிதியாக்குகின்றீர்கள்?' என வினவினார்கள். அப்போது நபியவர்கள் 'அலியே! மூஸாவுக்கு ஹாரூன் எவ்வாறு இருந்தாரோ அவ்வாறே நீர் எனக்கு இருப்பதை பொருந்தவில்லையா? எனக்குப் பின்னால் எந்த நபியும் வரமாட்டார்'.
மேற்படி ஹதீஸ் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடத்தில் தனக்கு உதவியாக> பிரதி நிதியாக ஒருவரைத் தரும்படி பிராத்தித்த போதே ஹாரூன்(அலை) அவர்கள் துணையாக கொடுக்கப்பட்டார்கள். ஹாரூன்(அலை) மூஸா(அலை) அவர்களுக்கு உதவியாளராகவும்> பிரதிநிதியாகவும் செயற்பட்டார்கள். இது போன்றே இமாம் அலி(அலை) அவர்களை நபி(ஸல்) அவர்கள் தனது பிரதிநிதியாகவும்> அமைச்சராகவும் நியமித்தார்கள்> என்பதை இந்த ஹதீத் தெளிவு படுத்துவதாகவுள்ளது.
04- انما ولیکم الله ورسوله والذین ءامنوا الذین یقیمون الصلاة ویؤتون الزکاة وهم راکعون.
(المائدة: 55)
'நிச்சயமாக உங்களுடைய பொறுப்பாளர்கள் அல்லாஹ்வும் அவனது தூதுவரும் ஈமான் கொண்டு தொழுகையை கடைப்பிடித்து ருகூவின் நிலையில் ஸக்காத்தும் கொடுத்தார்களே அவர்கள் தாம். (சூரா மாயிதா:55)
இவ்வசனம் இமாம் அலி(அலை) அவர்கள் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது யாசித்த ஒருவருக்கு தனது மோதிரத்தை தர்மம் செய்த போது அதனை புகழ்ந்து அருளப்பட்டதாகும்.
பக்ரு ராஸி : அபூதர்(ரலி) அறிவிக்கின்றார்கள்: 'ஒரு நாள் நபியவர்களுடன் லுஹர் தொழுது கொண்டிருந்தேன். யாசகம் கேட்கும் ஒருவர் பள்ளியில் யாசித்துக் கொன்டிருந்தார் எவரும் எதுவும் கொடுக்கவில்லை. அப்போது அந்த யாசகர் வானத்தை நோக்கி கையை உயர்த்தி 'இiறவா! றஸுலுல்லாஹ்வுடைய பள்ளியில் நான் யாசகம் கேட்டபோது ஒருவரும் எனக்கு எதுவும் தரவில்லை' என்று கூறினார். அப்போது அருகாமையில் தொழுகையில் ருகூவின் நிலையில் இருந்த அலி(அலை) அவர்கள் தனது வலது கையை நீட்டி அதில் அணிந்திருந்த மோதிரத்தை எடுத்துக்கொள்ளுமாறு யாசகனுக்கு குறிப்பால் உணர்த்தினார்கள். அதனை யாசகர் எடுத்துக் கொண்ட போது இவ்வசனம் இறங்கியது.
1- தப்ஸீருல் கபீர்: பாகம்: 12 பக்கம்: 26
2- துர்ருல் மன்தூர்: பாகம்: 3 பக்கம்: 104
3- தப்ஸீருல் குர்ஆன்: பாகம்: 2 பக்கம் 74
4- ஜாமிஉல் பயான்: பாகம்: 13 பக்கம்: 108
மேற்படி வசனம் இமாம் அலி(அலை) அவர்களின் விடயத்தில் இறங்கியது மாத்திரமின்றி அவர்களது தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தி 'வலீ' எனும் பொறுப்பை அவர்களுக்கு வழங்கியுள்ளது. இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'வலீ' எனும் சொல்லுக்கு அகராதிகளில் உதவியாளன்> தோழன்> வாரிசு எனும் கருத்துக்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட கருத்துக்களை காணக்கூடியதாகவுள்ளது.
(அல்காமூஸில் முஹீத்)
ஆனாலும்> இங்கு குறிப்பிடப்பட்ட 'வலீ' எனும் சொல்லுக்கு நபியவர்களே கதீர் கும் ஹதீஸ் மூலம் பொருள் வழங்கியுள்ளார்கள் 'من کنت مولاه فهذاعلي مولاه' 'நான் யாருக்கெல்லாம் பொறுப்பாளராக இருந்தேனோ அவர்களுக்கெல்லாம் (இனி) அலி பொறுப்பாளராக இருப்பார்' மேலும் கலீபா உமர் அவர்கள:; 'بخ بخ یابن ابی طالب اصبحت وامسیت مولای ومولا کل مؤمن ومؤمنة'
'முஃமினான ஆணுக்கும் பெண்ணுக்கும் பொறுப்பாளராக (வலி) ஆகிவிட்டீர்கள். உமக்கு சுபசோபனம் உண்டாவதாக' என இமாம் அலி அவர்களை கதீர் கும் எனும் இடத்தில் வைத்து வாழ்த்தினார்கள்.
(மிஷ்காத்: மனாகிபு அலி)
(ராஸி: மபாதிஹுல் கைப் பாகம் 12 பக்கம் 42)
எனவே இமாம் அலி(அலை) அவர்களை நபி(ஸல்) அவர்கள் தனக்குப்பின் தனது பிரதிநிதியாக கலீபாவாக நியமித்துள்ளார்கள் என்பதற்கு இவை தவிர இன்னும் நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே ஷீஅது அலி அலியைச் சார்ந்தோர் என்பது நபி(ஸல்) அவர்களால் அலி(அலை) அவர்களை தனக்குப் பின் பின்பற்றுபவர்களுக்கு வழங்கப்பட்ட பெயராகும். இதை ஓர் பிரிவாக அடையாளப் படுத்த முயல்வது தவறாகும் அதை விட ஷீஆக்களைப் பற்றி எவ்வித அறிவுமின்றி அவர்களை விமர்சிப்பதும் தவறாகும்.